அ.தி.மு.கவில் நடப்பதை பார்த்து தி.மு.க சந்தோஷம் அடைய வேண்டாம் என்று முன்னாள் அமைச்சர் கூறியுள்ளார்.
சென்னையில் கடந்த 23-ஆம் தேதி நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் பாதியிலேயே முடிவடைந்தது. இந்த பொதுக்குழு கூட்டத்தின் போது ஓ.பி.எஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் மீது தண்ணீர் பாட்டிலை வீசி எடப்பாடியின் ஆதரவாளர்கள் அவமானப்படுத்தினர். இதன் காரணமாக ஓ.பி.எஸ் பொதுக்குழுக் கூட்டத்தை புறக்கணித்து விட்டு பாதியிலேயே அங்கிருந்து கிளம்பி சென்றுவிட்டார். இந்நிலையில் திருவான்மியூரில் நடைபெற்ற தி.மு.க கட்சி நிர்வாகியின் இல்லத் திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் போது அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து முதல்வர் விமர்சித்துப் பேசியுள்ளார்.
இதற்கு அ.தி.மு.க கட்சியின் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் பதிலடி கொடுத்துள்ளார். இவர் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்தார். அதில் அ.தி.மு.க கட்சியில் நடக்கும் சம்பவங்களை பார்த்து தி.மு.க சந்தோஷப்பட வேண்டாம் என்றார். அதன் பிறகு தி.மு.கவில் உதயநிதி ஸ்டாலினுக்கு பட்டாபிஷேகம் நடக்கும் போது என்ன நடக்கிறது என்று நாங்களும் வேடிக்கை பார்க்கத்தான் போகிறோம். மேலும் அ.தி.மு.க கட்சியை ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் வழிநடத்தி சொல்லாத நிலையில் கட்சியின் அவைத் தலைவர் வழி நடத்திச் செல்வார் என்றும் கூறினார்.