ரேஷன் கடையில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் மக்கள் கூட்டம் அலை மோதியதால் கொரோனா பரவும் அபாயம் அதிக அளவு ஏற்பட்டது.
ராணிப்பேட்டையில் உள்ள வக்கீல் தெருவிலிருந்து பிஞ்சி செல்லும் சாலையில் ரேஷன் கடை ஒன்று இருக்கின்றது. அந்த கடையில் பொருள்களை எடை போடும் நபர் நேற்று வராத காரணத்தால், குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி வழங்கப்படவில்லை. அதன் பின்னர் மாலை 3 மணிக்கு அரிசி வழங்கப்பட்டதால், மக்கள் கூட்டம் அதிக அளவில் அலைமோதியது. மேலும் மாதக் கடைசி என்பதால், பொருட்கள் எங்கு கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் மக்கள் அதிக அளவில் கூடினர். அங்கு வந்தவர்கள் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்றாமல், ஒருவருக்கொருவர் இடித்தவாறு மிக நெருக்கமாக நின்று கொண்டிருந்தனர்.
அதிலும் சிலர் முகக் கவசங்கள் அணியாமல் வந்திருந்தனர். ரேஷன் கடை ஊழியர்களும், பொதுமக்களிடம் சமூக இடைவெளியை பின்பற்றி நில்லுங்கள் என்று சொல்லவில்லை. அதனால் அங்கு கொரோனா வைரஸ் பரவும் அபாயம் அதிக அளவு ஏற்பட்டது. அந்த ரேஷன் கடையில் முதலில் வரும் குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே பாமாயில் மற்றும் கோதுமை உள்ளிட்ட ரேஷன் பொருள்கள் அனைத்தும் வழங்கப்பட்டு வருகின்றன. அது மட்டுமன்றி குடும்ப அட்டைதாரர்களுக்கு எந்த பொருட்களும் சரியாக போய் சேர்வதில்லை. அதில் குறிப்பாக பச்சரிசி பெரும்பாலானோருக்கு கிடைப்பதில்லை.
இத்தகைய குற்றச்சாட்டுகளை குடும்ப அட்டைதாரர்கள் மட்டுமன்றி சமூக ஆர்வலர்கள் பலரும் கூறியுள்ளனர். அதனால் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் அரசு வழங்க கூடிய அனைத்து விதமான ரேஷன் பொருள்களையும் பாகுபாடு மற்றும் எந்தவிதமான தட்டுப்பாடும் இல்லாமல் சரியாக வழங்கி வர வேண்டும் என்று பொதுமக்கள் அனைவரும் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு முகக்கவசம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள நிலையில், அப்பகுதியில் தற்போது வரை முகக்கவசம் வழங்காமல் இருக்கின்றனர். அதனால் அப்பகுதியில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் விரைவில் முககவசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.