கோவை வனப்பகுதியில் உள்ள மலைக் கிராமங்களில் பழங்குடி மக்களின் சிரமத்தை தவிர்ப்பதற்கு நடமாடும் ரேஷன் கடைகள் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டப்பேரவை பொது கணக்குகள் குழு தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் கோவையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதுகோவையில் தொண்டாமுத்தூர் செங்குபதி மலைவாழ் கிராமம், சோமையம்பளையம், அண்ணா பல்கலைகழக வளாகம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், ஆர்எஸ் புரம் பகுதியில் கட்டப்பட்டு வரும் பெண்கள் விடுதி, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகிய இடங்களில் இன்று இக்குழு ஆய்வு மேற்கொண்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்வபெருந்தகை கோவை மலை கிராமம் வேளாண் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டதாகவும் அரசு ஊழியர்களிடம் குறையைக் கேட்டு தெரிந்து கொண்டதாகவும் கூறினார்.
கிராமங்களில் வாழும் பழங்குடியின மக்கள் விலங்குகளால் தாக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் நடமாடும் ரேஷன் கடைகள் மூலம் அவர்களின் வீடுகளுக்கே பொருள்கள் விநியோகிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக உடனடியாக வழித்தடம் இல்லாத கிராமங்களுக்கு வழித்தடம் அமைக்கப்பட்டு பேருந்து சேவை தொடங்கப்படும். கோவை அரசு மருத்துவமனையில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் ஒவ்வொன்றாக தீர்க்கப்படும். கோவை அரசு மருத்துவமனையில் பல்வேறு பிரச்சினைகள் இருந்தபோதும் கொரோனா காலத்தில் உயிரை பணையம் வைத்து பணியாற்றிய மருத்துவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்” என்று தெரிவித்துள்ளார்.