ஆட்டோ ஓட்டுநரை கொடூரமான முறையில் கொலை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பாறையடிவிளை பகுதியில் ஷிஜி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ ஓட்டுனராக இருந்துள்ளார். கடந்த 26 ஆம் தேதி ஷிஜியும், பணம்முகம் பகுதியைச் சேர்ந்த அஜின் என்பவரும் குளப்புரம் அன்னிகரை பகுதியில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது காரில் வந்த சில மர்ம நபர்கள் அஜினையும், ஷிஜியையும் கொடூரமான முறையில் வெட்டி விட்டு தப்பித்துச் சென்றுள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு குழித்துறை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ஷிஜியும், அஜினும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் களியக்காவிளை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த விசாரணையில் ரேஷன் அரிசி கடத்தல் கும்பல் குறித்து ஷிஜியும், அஜினும் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தால் மர்ம கும்பல் 2 பேரையும் கொடூரமான முறையில் தாக்கிக் கொலை செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. தற்போது இந்த வழக்கில் தொடர்புடைய ஜோஸ், மகேந்திர குமார் உள்ளிட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.