கடத்தல் கும்பலால் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பாறையடிவிளை பகுதியில் ஷிஜி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ ஓட்டுனராக இருந்துள்ளார். கடந்த 26-ம் தேதி ஷிஜியும், பணமுகம் பகுதியைச் சேர்ந்த அஜின் என்பவரும் குளப்புரம் அன்னிகரை பகுதியில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது காரில் வந்த சில மர்ம நபர்கள் அஜினையும், ஷிஜியையும்அரிவாளால் கொடூரமான முறையில் வெட்டி விட்டு தப்பித்துச் சென்றுள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன்பிறகு மேல் சிகிச்சைக்காக 2 பேரையும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து களியக்காவிளை காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர்.
அவர்கள் மர்ம கும்பல் விட்டுச் சென்ற காரை சோதனை செய்தபோது அதில் ரேஷன் அரிசி இருந்துள்ளது. அதில் மொத்தம் 1 1/2 டன் ரேஷன் அரிசி இருந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ரேஷன் அரிசி கடத்தல் பற்றி ஷிஜியும், அஜினும் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக மர்மகும்பல் ஷிஜி மற்றும் அஜின் ஆகியோரை கொடூரமான முறையில் தாக்கியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக ஜோஸ், மகேந்திர குமார் மற்றும் சிலர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். இந்நிலையில் ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் ஷிஜி சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து காவல்துறையினர் தாக்குதல் வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.