தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக அரிசி இலவசமாகவும் மற்ற மளிகை பொருட்கள் மலிவு விலையிலும் வழங்கப்படுகிறது. அதனால் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் மிகவும் பயனடைந்து வருகிறார்கள். இந்நிலையில் ரேஷன் பொருட்கள் தரம் இல்லாமல் இருக்கும் பட்சத்தில் அதனை திருப்பி அனுப்பலாம் என தமிழக அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது. தற்போது நியாய விலை கடைகளில் தரையில் சிதறிய பொருட்களை மீண்டும் விநியோகம் செய்யக்கூடாது என அனைத்து நியாய விலை கடை ஊழியர்களுக்கும் கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
ரேஷன் கடைகளின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் தூய்மையாக இருக்க வேண்டும். தரமான அரிசியை மட்டும் நியாய விலைக் கடைகளுக்கு அனுப்ப வேண்டும்.ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பண்டங்களின் கசிவு மற்றும் தரையில் சிந்தும் பொருட்கள் மக்களுக்கு மீண்டும் விநியோகம் செய்யப்படாததை உறுதி செய்ய வேண்டும். ரேஷன் அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யும்போது அத்தியாவசிய பொருட்கள் கீழே சிதறாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என அனைத்து நியாய விலை கடைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.