கன்னியாகுமரி ரயில்நிலையம் ரூ 68 கோடி செலவில் அதிநவீன முறையில் உலக தரத்துடன் மேம்படுத்தப்பட உள்ளது.
நாட்டின் மிகப் பெரிய போக்குவரத்து ரயில் போக்குவரத்து. மக்கள் நீண்ட தூரம் பயணம் செய்வதற்கு அதிகமாக ரயில் போக்குவரத்தை தான் பயன்படுத்துகின்றனர். இதனால் ரயிலில் பயணம் செய்கின்ற பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து உள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் ரயில் நிலையங்களை உலகத் தரத்துடன் நவீனப்படுத்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி ரயில் நிலையங்களை பழமை மாறாமல் புதுப்பித்து பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக நவீன மயமாக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 50 ரயில் நிலையங்கள் சர்வதேச அளவுக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
அதில் தமிழ்நாட்டில் சென்னை எழும்பூர், கன்னியாகுமரி, மதுரை, ராமேஸ்வரம், காட்பாடி ஆகிய 5 ரயில் நிலையங்கள் உலகத்தரத்தில் நவீனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பணியை நேற்று முன்தினம் சென்னையில் நேரு விளையாட்டு அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி ஆரம்பித்து வைத்துள்ளார். அதேசமயம் கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், விஜயகுமார் எம்.பி., கன்னியாகுமரி தொகுதி எம்.எல்.ஏ., தளவாய்சுந்தரம், நாகர்கோவிலில் மேயர் மகேஷ், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் ஆகியோர் பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் திருவனந்தபுரம் கோட்ட மேலாளர் முகுந்த் வரவேற்றுப் பேசினார். மேலும் கட்டுமான துறை தலைமை பொறியாளர் நன்றி தெரிவித்தார். கன்னியாகுமரி ரயில் நிலையம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி ரயில் நிலையத்தை மேம்படுத்தும் பணி தொடர்பாக அதிகாரி ஒருவர் பேசியதாவது, கன்னியாகுமரி ரயில் நிலையம் ரூ 60 கோடியில் அதிநவீன முறையில் உலக தரத்துடன் மேம்படுத்த இருக்கின்றது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கவருகின்ற வகையில் இந்த ரயில் நிலையத்தில் முகப்பு பகுதி விவேகானந்தர் நினைவு மண்டபம் போல வடிவமைத்து அழகுபடுத்த உள்ளது.
மேலும் கூடுதல் பயணிகள் வந்து செல்கின்ற வகையில் ரயில் நிலையம் விரிவாக அமைக்க உள்ளது. இதைத் தொடர்ந்து பயணிகள் ஓய்வு அறை, கழிவறை, தளத்துடன் கூடிய 6 பிளாட்பாரங்கள், கூடுதல் டிக்கெட் கவுண்டர்கள், மாற்றுத்திறனாளிகள் செல்வதற்கு வசதி, 250 கார்கள் நிறுத்தும் வசதி, 400 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதி அனைத்து சர்வதேச தரத்துடன் அமைக்க உள்ளது என்று அவர் தெரிவித்தார்.