சிறுவன் ஒருவரை குற்றச்செயலில் ஈடுபட வைத்த வெளிநாட்டு தம்பதியினர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரோமேனியாவில் வசிக்கும் தம்பதியினர் Llie Para(33)-Marta Para (33) ஆவர். இவர்கள் லண்டனில், ஆடம்பர பொருள்கள் உள்ள ஒரு பெரிய கடைக்கு ஆறு வயது சிறுவனுடன் தங்களுடைய சொகுசு காரில் வந்து இறங்கினார்கள். அங்கு பல பொருட்களை பார்த்து விலை பேசிய அவர்கள் அதிக விலை கொண்ட வாட்ச்சை பார்த்துள்ளனர். அப்போது அந்த சிறுவன் வீட்டிற்கு செல்ல வேண்டுமென்று அழுததால் இன்னொரு நாள் வந்து வாட்ச்சை வாங்கிக்கொள்கிறோம் என்று கடை ஊழியரிடம் கூறிவிட்டு கிளம்பியுள்ளனர்.
அதற்கு மறுநாள் கடை ஊழியர் ஒருவர் அந்த வாட்ச்சை தற்செயலாக பார்த்தபோது அதில் உள்ள எண்கள் வித்தியாசமாக இருந்ததால் உடனே சென்று மேலதிகாரியிடம் கூறியுள்ளார். அப்போதுதான் விலை உயர்ந்த அந்த வாட்ச் திருட்டுப் போய்விட்டது என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து மேலதிகாரி சந்தேகமான அந்த தம்பதியினரின் மேல் காவல்நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். உடனே காவல்துறையினர் அவர்களை தேடிய போது அவர்கள் இருவரும் வீட்டை காலி செய்து விட்டதாக அருகிலுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அவர்கள் தப்பிப்பதற்காக பிரிட்டன் செல்ல Dover துறைமுகத்தில் இருந்த போது போலீசார் அவர்களை மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர். இதையடுத்து காவல்துறையினர் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தம்பதியினர் சில நாட்களுக்கு முன்பு அந்த கடைக்கு சென்றுள்ளனர். அந்த விலை உயர்ந்த வாட்ச் வேண்டும் என்று கூறிய Llie Para அதை தனது செல்போனில் படம் எடுத்துள்ளார். அதன் பிறகு வீட்டிற்கு வந்து அதை போலவே போலியான ஒரு வாட்சை தயார் செய்திருக்கின்றனர். இதையடுத்து சில தினங்களுக்கு பிறகு அந்த கடைக்கு ஒரு சிறுவனுடன் சென்ற அவர்கள் அதே வாட்ச் வேண்டுமென்று கூறியுள்ளனர்.
தலையை மறைக்கும் அளவிற்கு சட்டை அணிந்திருந்த அச்சிறுவன் திடீரென அழுதாதல், அவனை சமாதானம் செய்வது போல கட்டி பிடித்து அவனது சட்டை பையில் இருந்த போலி கடிகாரத்தை எடுத்து கடையில் வைத்து விட்டு விலையுயர்ந்த வாட்சை திருடி சென்றுள்ளனர். இதையடுத்து காவலில் உள்ள அத்தம்பதியினரை டிசம்பர் 24ம் தேதியன்று கோர்ட்டில் ஆஜர் செய்யப்படுவார்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.