ரூ 6 1/2 கோடி மதிப்பில் ஹெராயின் போதை மாத்திரைகளை வயிற்றுக்குள் கடத்தி வந்த உகண்டா வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு சார்ஜாவிலிருந்து வரும் விமானத்தில் பெருமளவில் போதை மாத்திரைகள் கடத்தி வருவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் உதய் பாஸ்கருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. இத்தகவலின் பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது சார்ஜா விமானத்தில் வந்த உகண்டா நாட்டில் வசித்த 21 வயதுடைய எளி ஜேம்ஸ் ஒப்பி என்பவர் சந்தேகப்படும்படி இருந்தார். அவரை சுங்க இலாகா அதிகாரிகள் நிறுத்தி விசாரணை செய்தபோது அவர் முன்னும் பின்னும் முரணாக பதிலளித்தார்.
இதனை அடுத்து அவருடைய உடைமைகளை சோதனை செய்து பார்த்தபோது அதில் எதுவுமில்லை. அதன் பின் அவரை தனி அறைக்கு கூட்டி சென்று விசாரணை செய்தபோது அவருடைய வயிற்றுக்குள் ஏதோ மர்ம பொருட்களை பதுங்கி வைத்தது தெரிய வந்துள்ளது. உடனே அவருடைய வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்தனர். அதில் அதிக அளவில் மாத்திரைகள் இருப்பது தெரிய வந்துள்ளது. அதன்பின் அவரை மருத்துவமனையில் அனுமதித்து இனிமா கொடுத்து வயிற்றுக்குள் இருந்த மர்ம பொருட்களை வெளியே எடுத்து உள்ளனர்.
அதில் 80 மாத்திரை கேப்சூல்களில் போதைப் பொருட்களை அடைத்து வைத்து அதை விழுங்கி வயிற்றுக்குள் பதுக்கி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டன. அதன்பின் அந்த கேப்சூல் ஆய்வுக்கு அனுப்பினர். அதில் பரிசோதித்துப் பார்த்தபோது ஹெராயின் போதை மாத்திரைகள் என்பது தெரியவந்தது. இதன் மாத்திரை மதிப்பு ரூ 6,58,00,000 ஆகும். மேலும் இந்த மாத்திரைகளின் எடை 940 கிராம். இதனை அடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் இந்த மாத்திரைகளை பறிமுதல் செய்து வாலிபர் எளி ஜேம்ஸ் ஒப்பியை கைது செய்துள்ளனர்.
அதன்பின் இந்த மாத்திரையை எங்கிருந்து கடத்தினார்? இதற்குப் பின்னணியில் யார் இருக்கின்றார்? எதற்காக கடத்தினார்? என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த இரண்டு தினங்களுக்கு முன் கோவையில் அயல் சினிமா பாணியில் ரூ 4 கோடி மதிப்பில் போதை மாத்திரைகளை கடத்தி வந்த உகாண்டா நாட்டு பெண் கைது செய்யப்பட்டுள்ளார். தற்சமயம் அதேபோல் சென்னையில் உகண்டா நாட்டு வாலிபர் மாத்திரைகளை கடத்தி வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.