புது டெல்லியில் உள்ள பஹார்கஞ்ச் பகுதியில் டெலிவரி நிறுவனத்தில் வேலை பார்க்கும் இருவர் சென்று கொண்டிருந்தனர். அவர்களை போலீஸ் போன்ற உடை அணிந்திருந்த ஒருவர் நிறுத்தியுள்ளார். அதன்பின் டெலிவரி நிறுவனத்தில் வேலை பார்க்கும் 2 பேரும் அந்த நபரை போலீஸ் என நினைத்து அவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளனர். அப்போது போலீஸ் ஆடை அணிந்திருந்த நபர் அவர்கள் கையில் வைத்திருந்த பார்சலை பிரித்து பார்க்க முயற்சி செய்துள்ளார். அந்த சமயத்தில் அங்கு வந்த மற்றொரு நபர் பார்சலை கொடுக்கவில்லை என்றால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி கண்களில் மிளகாய் பொடியை தூவி விட்டு பார்சலை பிடுங்கி கொண்டு அங்கிருந்து ஓடி விட்டனர். இது குறித்து டெலிவரி நிறுவனத்தில் வேலை பார்க்கும் 2 பேரும் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
அந்தப் புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த விசாரணையின் போது சந்தேகப்படும்படியாக 4 பேர் சுற்றி கொண்டிருந்ததும் அவர்கள் ஒரு டாக்ஸி டிரைவரிடம் 100 ரூபாய் பெற்றுக் கொண்டு பேடிஎம் இல் அவருக்கு பணத்தை திருப்பி அனுப்பியதும் தெரிய வந்தது. இந்த 100 ரூபாயை டீ குடிப்பதற்காக அவர்கள் டாக்ஸி டிரைவர் சாரதியிடமிருந்து வாங்கியது தெரியவந்தது. இந்த பணப்பரிவர்த்தனை தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்திய போது தான் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை திருடியது தெரியவந்தது. மேலும் வழக்கில் தொடர்புடைய 3 பேரை காவல்துறையினர் கைது செய்ததோடு, 6270 கிராம் தங்க நகைகள், 3 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் வைர நகைகளை பறிமுதல் செய்துள்ளனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ. 6 கோடி ஆகும்.