தாசில்தார் லஞ்சம் கேட்டதால் உயிரிழந்த தாயின் பிணத்தை எடுத்துக்கொண்டு தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் மேஜையில் வைத்து மகள் போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், அனந்தபுரம் மாவட்டம், தர்மாவரம் பட்டணம் பகுதியை சேர்ந்த பெத்தண்ணா என்பவரின் மனைவி லட்சுமி தேவி. இவர்களுக்கு நாகேந்திரம்மா, லட்சுமியம்மா, ரத்தினம்மா என மூன்று மகள்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெத்தண்ணா இறந்துவிடவே அவர் பெயரில் இருந்த 5 ஏக்கர் விவசாய நிலத்தை தனது பெயருக்கு பட்டாவை மாற்றி தருமாறு லட்சுமி அம்மாள் தனது மூன்று மகள்களுடன் தாலுகா அலுவலகத்தில் மனு கொடுத்திருந்தார். மனுவை விசாரித்த தாசில்தார் பட்டா மாற்றி கொடுக்க வேண்டும் என்றால் ஐந்து லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார். அதற்கு லட்சுமி தேவி தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்றும், வேண்டும் என்றால் 40 ஆயிரம் தருவதாக தாசில்தாரிடம் கூறியுள்ளார்.
தாசில்தார் 5 லட்சம் பணத்தை தந்தால் மட்டுமே பட்டா மாற்றி தருவேன் என்று கூறியுள்ளார். பிறகு லட்சுமி தேவி தனது மூன்று மகள்களுடன் கடந்த ஓராண்டாக அலைந்து திரிந்து உள்ளார். கடந்த திங்கட்கிழமை தனது மகளுடன் சென்ற அவர் தாலுகா அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டார். இருப்பினும் அதிகாரிகள் உரிய பதில் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் மாரடைப்பு காரணமாக லட்சுமி அம்மா திடீரென்று உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த 3 மகள்களும் தனது தாயின் பிணத்தை எடுத்து கொண்டு தாலுகா அலுவலகத்திற்கு சென்று தாசில்தார் மேஜையில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதானம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். மேலும் அவர்கள் தனது தாய் மனவேதனையை மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாகவும், அவரது உயிரை மீட்டுத் தருமாறு போலீசாரிடம் வாக்குவாதம் அளித்தனர். காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பிறகு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். தாசில்தார் அலுவலகத்தில் மேஜையில் பிணத்தை வைத்து மகள்கள் போராட்டம் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.