ஏல சீட்டு பணத்தை மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என லாரி ஓட்டுநர் தனது குடும்பத்துடன் வந்து புகார் அளித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுஇடையம்பட்டி பகுதியில் லாரி ஓட்டுநரான பாஸ்கர்(40) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவி மற்றும் மூன்று பெண் குழந்தைகளுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, கணியம்பாடி பகுதியில் வசிக்கும் இரண்டு பேர் இணைந்து மாத ஏல சீட்டு நடத்தியுள்ளனர். கடந்த 2018-ஆம் ஆண்டு அவர்களிடம் மாதந்தோறும் இரண்டு ஏல சீட்டுக்கு 25 ஆயிரம் ரூபாய் வீதம் தொடர்ந்து 38 மாதங்கள் பணம் கொடுத்தேன்.
இதனை அடுத்து அவசர தேவைக்காக ஏலத்தில் சீட்டு எடுக்க முயன்ற போது பணத்தை தர அவர்கள் மறுத்துவிட்டனர். அவர்கள் எனக்கு 9 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் தர வேண்டும். நான் போராடி அவர்களிடமிருந்து முதற்கட்டமாக 4 லட்சத்து 52 ரூபாயை வாங்கிவிட்டேன். மீதமுள்ள பணத்தை இதுவரை கொடுக்காமல் என்னை ஏமாற்றி வருகின்றனர். மேலும் பணத்தை கேட்டால் தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டல் விடுகின்றனர். எனவே பணத்தை மீட்டுத் தந்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பாஸ்கர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.