எலக்ட்ரிக் வாகனங்களுக்கு 20,000 ரூபாய் வரை மானியம் வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக அண்மைக்காலமாக எலக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வருகின்றது. அதற்கேற்ப அரசு மானியம், உதவி தொகை போன்றவற்றை வழங்கி வருகின்றது. வாகனங்களுக்கு வழங்கப்படும் மானிய தொகையை மத்திய அரசு தற்போது உயர்த்தியுள்ளது. இதுபோக குஜராத் அரசு வாகனங்களுக்கு கூடுதல் ஊக்க தொகையை அறிவித்துள்ளது. இதனால் மக்கள் அனைவரும் எலக்ட்ரிக் வாகனங்களை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில் ராஜஸ்தான் அரசு நிர்வாகம் கொள்கையை அறிவித்துள்ளது. இருசக்கர வாகனங்கள் மூன்று சக்கர வாகனங்களுக்கு மானியம் வழங்குவதாக தெரிவித்துள்ளது. அதாவது கடந்த ஏப்ரல் மாதம் முதல் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை வாடிக்கையாளர்கள் வாங்கும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி தொகை அவர்களிடமே திருப்பி செலுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களை வாங்குவோருக்கு 5000 முதல் 20 ஆயிரம் வரை மானியம் வழங்க முடிவு செய்துள்ளது. வாகனத்தின் பேட்டரி அளவிற்கு ஏற்ப மானிய தொகை வேறுபடும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் இதை ரிவோல்ட் மின்சார வாகன நிறுவனம் வரவேற்றுள்ளது. ரிவோல்ட் மின்சார இருசக்கர வாகனத்தின் விலை 90,000 முதல் 95,000 வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. ராஜஸ்தான் அரசு மானியம் வழங்குவதன் மூலம் பல தரப்பினர் இந்த வாகனத்தை பெற்று பயன்பெற முடியும். ரிவோல்ட் வாகனம் மூலம் வெறும் 9 ரூபாயில் 100 கிலோமீட்டர் வரை நம்மால் பயணம் செய்ய முடியும். தற்போது பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்கள் அனைவரும் மின்சார வாகனத்தின் மீது அதிக ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர். அரசும் இது போன்ற சலுகைகளை வழங்கி வருவதால் மின்சார வாகனத்தின் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது.