திருத்தணி அருகே வியாபாரிகளிடம் கலர் ஜெராக்ஸ் எடுக்கபட்ட ரூபாய் 2000 நோட்டுகளை கொடுத்து கும்பல் ஒன்று ஏமாற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருத்தணி அருகே ஆடு மேய்ப்பவரிடம் 64 ஆயிரம் ரூபாய்க்கு கலர் ஜெராக்ஸ் பணத்தைக் கொடுத்து, 4 ஆடுகள் வாங்கிச் சென்ற மோசடி கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகேயுள்ள ஆற்காடு குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி. சொந்தமாக 30 ஆடுகளை வைத்துக் கொண்டு, மேய்ச்சல் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவரைத் தேடிவந்த ஆட்டோவில் வந்த ஒரு பெண் உட்பட 3 பேர், பக்ரீத் பண்டிகைக்காக செம்மறி ஆடுகள் வாங்க வந்ததாக கூறியுள்ளனர்.
இதையடுத்து, 4 ஆடுகளை 64 ஆயிரம் ரூபாய்க்கு பேரம் பேசிய நிலையில், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக பணத்தைக் கொடுத்துவிட்டு, ஆடுகளை ஆட்டோவில் ஏற்றிச் சென்றுள்ளனர். இதையடுத்து, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கு பணத்தை எடுத்துச் சென்றபோது, அத்தனையும் கலர் ஜெராக்ஸ் என்பது தெரிய வந்திருக்கிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த முனுசாமி, கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவ்வளவுதான்