தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் 15லட்சம் ரூபாய் வரை ரொக்கமாக எடுத்துச் செல்ல அனுமதிக்கக் கூடிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச் சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், அரசு தரைப் பணிகளை மேற்கொண்டுவரும் ஒப்பந்தகாரர்களிடம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருவதாகவும், அவர்களுக்கு வாரந்தோறும் ஊதியம் வழங்கவேண்டும் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக குறைந்தது இரண்டு லட்சம் ரூபாய் வரை ரொக்கமாக கொண்டு செல்ல வேண்டி உள்ளதாகவும், நடத்தை விதிகள் அமலுக்கு வந்திருப்பதால் இரண்டு லட்சம் ரூபாய் முதல் பதினைந்து லட்சம் ரூபாய் வரை ரொக்கமாக கொண்டு செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் செந்தில் குமார் ராமமூர்த்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது உரிய ஆதாரங்களை காட்டி கூடுதல் பணத்தை எடுத்துச் செல்லலாம் என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் சோதனைகள் நடத்தலாம் என்றும், ஒட்டுமொத்தமாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். உரிய ஆதாரங்களை காட்டி50ஆயிரத்திற்கு மேல் பணத்தை எடுத்துச் செல்லலாம் என்றும், ஆதாரங்கள் காட்டா விட்டால் பணத்தை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்யலாம் என்று உத்தரவிட்டனர்.