சென்னை மாவட்டத்தில் உள்ள எர்ணாவூர் கண்ணிலால் நகல் 2-வது தெருவில் ஆனந்தகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை நண்பர்கள் மாற்றுதிறனாளி நல சங்கத்தில் தலைவராக இருக்கிறார். கடந்த 5 வருடங்களுக்கு முன்பு ஆனந்தகுமார் சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் சங்கீதா உட்பட 150 மாற்றுத்திறனாளிகளிடம் அரசு ஒதுக்கீடு செய்யும் வீடுகளை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறினார். இதனை நம்பி ஒவ்வொருவரும் தலா ரூ.20,000 என மொத்தம் 12 லட்சத்து 96 ஆயிரம் ரூபாயை ஆனந்தகுமாரிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது போல் ஆனந்தகுமார் போலியான ஆவணங்களை தயாரித்து கொடுத்துள்ளார்.
இதனை அறிந்த மாற்றுத்திறனாளிகள் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து பணத்தை திரும்ப தருமாறு கேட்டுள்ளனர். ஆனால் பணத்தை திரும்ப கொடுக்காமல் ஆனந்தகுமார் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், ஆனந்தகுமார் 13 லட்சம் ரூபாய் மோசடி செய்தது உறுதியானது. பின்னர் ஆனந்த குமாரை நேற்று போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் சங்க பொதுச் செயலாளர் சாரா பானு என்பவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.