தமிழகத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தொண்டர்களிடமிருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. திருச்சி மத்திய மாவட்டம் மற்றும் வடக்கு மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான விருப்ப மனு வாங்கும் நிகழ்ச்சி திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இன்று காலை நடைபெற்றது.இதில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சரும் தி.மு.க. முதன்மைச் செயலருமான கே. என்.நேரு தலைமை தாங்கி, உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் தி.மு.க.வினரிடம் இருந்து விருப்ப மனுக்களை பெற்றுக்கொண்டார். இதில் மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுபவர்களிடமிருந்து ரூ.10,000, நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுபவர்களிடம் ரூ.5 ஆயிரம், பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுபவர்களிடம் ரூ. 2,500 என விருப்ப மனுவிற்கான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு பெறப்பட்டது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தி.மு.க.வினர் ஏராளமானோர் போட்டி போட்டுக்கொண்டு விருப்ப மனுக்களை வழங்கினர். இதனால் கூட்டம் களைகட்டியது. அதே சமயம் இந்த நிகழ்ச்சியில் கொரோனா விதிகள் பின்பற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தற்போது பொதுமக்களை கொரோனா விதிகளை சரியாக பின்பற்றும் பொழுது முன்னோடியாக இருக்க வேண்டிய ஆளும் கட்சி நிர்வாகிகள் இவ்வாறு செய்வது நல்லது அல்ல என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.