ராமர் கோவில் பூமி பூஜை விழா நிறைவடைந்த நிலையில் இராவணனைப் புகழ்ந்து மக்கள் ட்விட்டரில் ஹேஸ்டேக்குகளை பகிர்ந்து வருகின்றனர்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இதனை இந்தியா முழுவதும் உள்ள மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு அங்கமாக சமூக வலைதளங்களில், ஜெய் ஸ்ரீராம் உள்ளிட்ட ஹேஸ்டேக்குகளின் கீழ் மக்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிக்காட்டி வருகின்றனர். மேலும் இதில் முக்கியமாக, #TamilsPrideRavanaa #LandOfRavana என்ற ஹேஸ்டேக்குகள் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகின்றன. இந்த ஹேஸ்டேக்குகளின் கீழ், கருத்துகளைப் பதிவிட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் தமிழர்களாக உள்ளனர். ராவணன் பற்றி படத்தில் பேசப்பட்ட காட்சிகள், அரசியல் தலைவர்கள் பேசிய பேச்சுகள், ராமரை விமர்சித்த பேச்சுகள் போன்றவற்றை இந்த ஹேஸ்டேக்குகளின் கீழ் பதிவிட்டு வருகின்றனர்.
ராமனுக்கு எதிராக ராவணனை முன்னிறுத்துவது தமிழ்நாட்டிற்கோ, தமிழர்களுக்கோ புதிதான விஷயமல்ல. மேலும் ராவணன் வாழ்ந்ததாக கருதப்படும் தென்திசை நோக்கி அம்புகளை மக்கள் எய்தும், ராவணனின் உருவ பொம்மையை எரித்தும் வடமாநிலத்தில் ‘ராம லீலா’ கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு எதிராக பெரியார் திடலில், 1974ம் ஆண்டு மணியம்மை தலைமையில் ‘ராவண லீலா’ நடத்தப்பட்டது. அதில் ராமர், லட்சுமணன், சீதை இவர்களின் உருவபொம்மை எரிக்கப்பட்டு, ராவணன், கும்பகர்ணன் ஆகியோர் வீரர்களாக அங்கு காட்டப்பட்டனர். அதேபோல் ராமாயணத்தை தமிழ்நாட்டில் ஏற்போரும் உண்டு, எதிர்ப்போரும் உண்டு.
ராமாயணத்திற்கு எதிராக தமிழில் ராவண காவியமும் எழுதப்பட்டுள்ளது. ஆரியர்களுக்கும், தமிழர்களுக்கும் எதிரான இந்தப் பண்பாட்டுப் போர் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்தப் பண்பாட்டுப் போரின் தொடர்ச்சியாகவும், தமிழ்ச்சமூகம் ராவணனைக் கொண்டாடும் உள்ளார்ந்த உளவியலின் வெளிப்பாடாகவும் தமிழர்கள் இந்த ஹேஸ்டேக்குகளைப் பதிந்து, அதன் அருகில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர் என்றே நாம் கூறலாம்.