அயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவிற்கு மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சியின் சார்பாக 11 வெள்ளி செங்கற்கள் அனுப்பப்பட்டுள்ளன.
உத்திரபிரதேச மாநிலத்தில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த நிலையில் அயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவிற்கு மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பாக 11 வெள்ளி செங்கற்கள் அனுப்பப்பட்டுள்ளதாக மாநில காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல் மந்திரியுமான கமல்நாத் கூறியுள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, “மத்தியபிரதேச குடிமக்களின் சார்பில் ராமர் கோவில் கட்டுவதற்காக 11 வெள்ளி செங்கற்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த வெள்ளி செங்கற்கள் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் பங்களிப்பின் மூலமாக வழங்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு கமல்நாத் வரவேற்பு அளித்து. கடந்த 1985ஆம் ஆண்டு அயோத்தியில் ராமஜென்ம பூமி தளத்தை மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி திறந்து வைத்ததை நினைவு படுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, இவை எங்கள் உணர்வுகள். நாட்டில் ராமராஜ்யம் வரவேண்டும் என ராஜீவ்காந்தி 1989ஆம் ஆண்டு கூறியிருந்தார். ராஜீவ் காந்தியால் தான் ராமர் கோவிலின் கனவு நினைவாகியுள்ளது. இந்த நேரத்தில் அவர் உயிருடன் இருந்திருந்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருப்பார் என்று கூறியுள்ளார்.