ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் புகழ்பெற்ற இராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில், 108 வைணவத் தலங்களில் ஒன்றான திருப்புல்லாணி ஆதிஜெகன்னாத பெருமாள் கோவில் போன்றவை அமைந்துள்ளன. சேதுபதி மன்னர்கள் ஆட்சி செய்த இராமலிங்க விலாசம் அரண்மனை வரலாற்று சின்னமாக உள்ளது. பாம்பன் ரயில் பாலம், முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் பிறந்து வளர்ந்த இடம் போன்றவையும் தொகுதியின் அடையாளங்கள்.
கடற்படை, கடலோர காவல் படை, கடற்படை பருந்து விமான தளம், முக்கிய பாதுகாப்பு படை முகாம்கள் இங்கு உள்ளன. ராமநாதபுரம் தொகுதியில் அதிமுக 6 முறையும், திமுக 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன. காங்கிரஸ் கட்சி 3 முறை தொகுதியை கைப்பற்றியுள்ளது. மனிதநேய மக்கள் கட்சி ஒரு முறையும், சுயேச்சை வேட்பாளர் ஒரு முறையும் வென்றுள்ளன. தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ. அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன்.
ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 3,00,855 வாக்காளர்கள் உள்ளனர். ராமநாதபுரம் தொகுதியின் முக்கிய பிரச்சினையான குடிநீர் தட்டுப்பாடு ஆண்டாண்டு காலமாக நீடிக்கிறது. அண்மையில் புயல் காரணமாக பெய்த மழை மற்றும் பருவமழையால் நிரம்பியுள்ள நீர் நிலைகளை முறையாக பராமரித்தால் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க முடியும் என்பது மக்களின் எண்ணம். ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்ட குழாய்களை சீரமைத்து முறையாக பராமரிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் நிலை உள்ளதால் தொழிற்சாலைகள் மற்றும் தொழிற்பேட்டைகள் உருவாக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கை. ராமநாதபுரம் தொகுதியில் மற்றொரு நீண்டகாலப் பிரச்சினை மீனவர்கள் பிரச்சினை. கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்கும் போது ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்துவது தொடர்கதையாகவே உள்ளது.
இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் தமிழக மீனவர்கள் இடையூறின்றி மீன் பிடிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது தொகுதி மக்களின் முக்கிய கோரிக்கை ஆகும். மீனவர்களுக்கான நலத்திட்டங்கள் போதுமானதாக இல்லை என்பதும் அவர்களின் குற்றச்சாட்டாக உள்ளது. விபத்துகளை தடுக்க குண்டும் குழியுமான சாலைகளை சீரமைக்க வேண்டும் என்றும், சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்லும் ராமேஸ்வரம் பகுதியை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.