பணம் தராததால் வயதான மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்து நடமாடிய ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் அடுத்துள்ள செட்டியமடையில் சந்தியாகு (எ) சந்திரசேகரன்(82) என்பவர் வசித்து வருகிறார். ஓய்வு பெற்ற ஆசிரியரான இவருக்கு ஞானசவுந்தரி(78) என்ற மனைவி உள்ளார். இவர்களது பிள்ளைகள் திருமணம் முடிந்து வெளியூரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 5ஆம் தேதி வீட்டில் இருந்த ஞானசவுந்தரி உடலில் காயங்களுடன் உயிரிழந்து கிடப்பதாக சந்திரசேகரன் ஆர்எஸ் மங்கலம் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ஞானசவுந்தரியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதுகுறித்து சந்திரசேகரிடம் நடத்திய விசாரணையில் அவர் கடைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து பார்த்தபோது ஞானசவுந்தரி உயிரிழந்து கிடந்ததாக முன்னுக்கு பின் பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் சந்திரசேகரனை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் உண்மை சம்பவம் வெளியாகியுள்ளது. இந்நிலையில் சந்திரசேகரனின் பிள்ளைகள் மாதந்தோறும் செலவுக்கு பணம் அனுப்புவது வழக்கம்.
அந்த பணத்தை ஞானசவுந்தரி சந்திரசேகரிடம் கொடுக்காமல் இருந்துள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சந்திரசேகரன் ஞானசவுந்தரியை அடித்தும் அரிவாளால் வெட்டியும் கொலை செய்துள்ளார். இதனையடுத்து ஒன்றும் தெரியாதது போல் மனைவியை வேறு யாரோ கொலை செய்து விட்டதாக நடித்தது அம்பலமானது. இதனைதொடர்ந்து காவல்துறையினர் சந்திரசேகரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.