ராணுவத்தில் படைகளை வழிநடத்திச் செல்வதற்கு பெண்களை அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
ராணுவ நியமனத்தில் ஆண், பெண் பாகுபாடு பார்க்கப்படுவதாக மூத்த வழக்கறிஞர்கள் மீனாட்சி லேகி, ஐஸ்வர்யா பட்டி ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் பெண்களின் உடலியல் அம்சங்களுக்கு அவர்களின் உரிமைகளுடன் எந்த தொடர்பும் இல்லை என்று கூறி ராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்கு கமாண்டர் பொறுப்பு வழங்க அனுமதி வழங்கி அதிரடியாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் 14 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றிய பெண் அதிகாரிகளுக்கு உயர் பதவி வழங்கவேண்டும். ராணுவத்தில் பெண்களை நியமிப்பதற்கான உத்தரவை நிரந்தரமாக வேண்டும் எனவும், பாதுகாப்பு படையில் பெண்களுக்கும் நிரந்தர ஆணையம் வேண்டும் என்றும் உத்தரவை நேற்று பிறப்பித்தனர். இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், பெண் அதிகாரிகள் ஆயுதப் படையில் நிரந்தரமாக பணியாற்றலாம் என உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை முழு மனதுடன் வரவேற்கிறேன். கடந்த 2018ம் ஆண்டு சுதந்திர தின உரையின்போது, பெண்கள் படைகளை வழிநடத்திச் செல்லும் அளவிற்கு ஆயுதப் படையில் அவர்களுக்கு நிரந்தர பணியிடங்களை வழங்க வேண்டும் என்ற யோசனையை பிரதமர் மோடி தெரிவித்தார் என அவர் பதிவிட்டுள்ளார்.