ராசிபுரம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக 8 முறையும், திமுக 5 முறையும் வெற்றி பெற்றுள்ளன. காங்கிரஸ் இரு முறை வெற்றி பெற்றுள்ளது. தற்போதய எம்எல்ஏ அமைச்சர் சரோஜா. ராசிபுரம் தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,36,060 ஆகும். பட்டு மற்றும் நெய் உற்பத்தி ராசிபுரத்தில் அடையாளங்களாக உள்ளன. மலை கிராமங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என்பது கோரிக்கையாகவே நீடிக்குறது.
அனைத்து பேருந்துகளும் நகரத்திற்குள் வந்து செல்ல வேண்டும் என்றும், சுற்றுச்சாலை அமைக்க வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்துகின்றனர். ஜவ்வரிசி ஆலைகள் நிறைந்துள்ள ராசிபுரத்தில் சேகோ கூட்டுறவு விற்பனை நிலையம் அமைக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். ராசிபுரத்தில் மையமாக கொண்டு உட்கோட்ட அலுவலகம் அமைக்க வேண்டும் என்றும், வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
தூய்மை பணியாளர்களுக்கு குடியிருப்பு வசதிகள் ஏற்படுத்த வேண்டுமென்றும், குடிநீர் தட்டுப்பாட்டை போக்க மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கின்றனர். பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்பது மக்களின் விருப்பமாக உள்ளது. அரசு மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்துகின்றனர். நீர் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும் என்றும் கோருகின்றனர்.