கடந்த இரண்டு வருடங்களாக உலகம் முழுவதும் கொரோனா பரவல் கொடூரமான பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் பொருளாதார ரீதியாக பல நாடுகள் பாதிக்கப்பட்டன. இதனையடுத்து கொரோனாவை சமாளிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக கொரோனா படிப்படியாக கட்டுக்குள் வந்தது .இதனால் மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பினார்கள். இந்த நிலையில் சீனா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது
இதனை குறிப்பிட்டு மத்திய அரசு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் மூலம் நேற்று தெரிவித்துள்ளது. இந்நிலையில் ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரையில் கொரோனா நெறிமுறைகளை பின்பற்ற மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து ராகுல் காந்தி மற்றும் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டிற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கடிதம் எழுதியுள்ளார். மேலும் கொரோனா நெறிமுறையை பின்பற்றுவது சாத்தியமில்லை என்றால் தேசிய நலன் கருதி ஒற்றுமை யாத்திரையை ஒத்திவைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.