2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் எதிர்க் கட்சியாக மம்தா பானர்ஜி கட்சி தான் இருக்க வேண்டும் என்றும், ராகுல் காந்தியால் பிரதமர் நரேந்திர மோடியை தோற்கடிக்கும் திறன் இல்லை என்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த எம்பி சுதீப் பந்த்யோபத்யாய் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு முறை நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்ட ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், சிவசேனா ஆகியவை 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியை தோற்கடிப்போம் என்று சபதம் எடுத்து உள்ளது. இதற்கான வேலைகளில் அக்கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கொல்கத்தா உ உத்தர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் சுதீப் பந்த்யோபத்யாய் பேசியதாவது “திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் மம்தா பானர்ஜி தான் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்த தலைவராக இருக்க வேண்டும் என கட்சி விரும்புகிறது. மேலும் நான் நீண்ட காலமாக ராகுல்காந்தி கவனித்து வருகிறேன். அவரால் ஒருபோதும் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஈடாக தன்னை வளர்த்துக் கொள்ள முடியவில்லை.
தேர்தலில் காங்கிரஸ் இல்லாத ஒரு கூட்டணி பற்றி நான் பேசவில்லை. மம்தா பானர்ஜி எதிர்க்கட்சியாக வைத்து பிரச்சாரம் செய்வோம். அவரைத்தான் இத்தேசம் மிகவும் விரும்புகிறது. நரேந்திர மோடியை ஒருபோதும் ராகுல் காந்தியால் தோற்கடிக்க இயலாது. கம்யூனிஸ்டுகளும் தனது மதிப்பை இழந்து வருகின்றனர்” என்று கூறினார். திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சுதீப் பந்த்யோபத்யாயின் இக்கருத்து தேசிய அரசியலில் மிகுந்த பேசு பொருளாக மாறியுள்ளது.