உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்ரோஷமான போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் உக்ரைன் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். எனினும் ரஷ்ய படைகளின் தாக்குதலுக்கு உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் உக்ரைனின் கார்கிவ் நகரில் ரஷ்யபடைகள் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் கைக்குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது ரஷ்யப்படைகள் வீசிய குண்டு அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் பாய்ந்ததில் அந்த கட்டிடம் பலத்த சேதமடைந்தது.
இதனால் இடிபாடுகளில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். அத்துடன் 34 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். கார்கிவ் நகரம் போர் தொடங்கிய நாள் முதலே ரஷ்யப் படைகளின் முக்கிய குறியாக இருந்து வருகிறது. இந்த வாரத்தில் ஒரே இரவில் அங்கு சுமார் 60 பீரங்கி குண்டுகள், ஏவுகணைகள், குடியிருப்புப் பகுதிகள் மற்றும் கட்டிடங்களை தாக்கியதில் பல பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.