நாடு முழுவதிலும் ரயில் பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் பல்வேறு வசதிகளை செய்து வருகிறது. அவ்வாறு ரயில்வே நிர்வாகத்தினுடைய புதிய முயற்சிகளுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைக்கிறது. இந்நிலையில் ரயில்வே நிலையங்களில் மொபைல் போன் ரீசார்ஜ் செய்தல், மின் கட்டணம் செலுத்துதல் உட்பட பல்வேறு சேவைகளை வழங்கும் சேவை மையங்கள் அமைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது குறித்து ரயில்வே நிர்வாகத்தின் மூத்த உயர் அதிகாரி கூறியுள்ளார். அதாவது, ரயில்வேயின் தொலை தொடர்பு பிரிவான ‘ரயில் டெல்’ ரயில்வே ஸ்டேஷன்களில் தொலை தொடர்பு குறித்த பல்வேறு சேவைகளை ஏற்கனவே வழங்கி வருகிறது.
இந்நிலையில் நாடு முழுதும் 200-க்கும் அதிகமான ரயில்வே ஸ்டேஷன்களில் பொது சேவை மையங்கள் திறப்பதற்கு முடிவு செய்துள்ளது. இந்த மையங்களை கிராமங்களைச் சேர்ந்த தொழில் முனைவோரை வைத்து நடத்தவும் திட்டமிடப்பட்டு இருக்கிறது. இங்கு மொபைல் போன் ரீசார்ஜ் செய்யக்கூடிய வசதி, மின் கட்டணம் செலுத்துதல், வருமான வரி கணக்கு தாக்கல் உட்பட பல சேவைகள் வழங்கப்படும்.
பேருந்து, ரயில், விமான டிக்கெட்களை முன்பதிவு செய்யும் வசதியும் இருக்கும். முதற்கட்டமாக உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி மற்றும் பிரயாக்ராஜ் ரயில்வே ஸ்டேஷன்களில் இந்த மையம் திறக்கப்படும். இதனைதொடர்ந்து படிப்படியாக 200க்கும் அதிகமான ரயில்வே ஸ்டேஷன்களில் இந்த மையங்கள் அமைக்கப்படும் என்று அவர் கூறினார்.