ரயில் பயணத்தில் செல்லும் பயணிகள் கடைசி நேரத்தில் ஆதார் கார்டை தொலைத்துவிட்டோம், வீட்டில் மறந்துவிட்டோம் எனக் கவலைப்படத் தேவையில்லை. இதற்காக தொடங்கப்பட்ட இ-சேவை மையத்தில் சென்று ஆதார் கார்டு, பான்கார்டு நகலை பதவிறக்கம் செய்து, நகல் எடுத்துக்கொள்ளலாம். மேலும் மொபைல் பில், தொலைப்பேசி கட்டணம் ஆகியவற்றையும் பயணத்தின்போது செலுத்திவிடலாம்.
இந்த இ-சேவை மையத்துக்கு ரயில்வே துறை சார்பில் “ரயில்வயர் சாத்தி கிசோக்ஸ்” என்று பெயரிடப்பட்டுள்ளது. அதன்படி ரயில் நிலையங்களில் இனி ஆதார் கார்டு, பான் கார்டு போன்றவற்றைப் பெறலாம் என்று இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. இதற்காக ரயில்டெல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளது.
இதனை தொடர்ந்து வருமானவரித் தாக்கல், விமான டிக்கெட் புக்கிங் உள்ளிட்ட பல வசதிகளையும் இவற்றின் மூலம் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரயில் பயணம் செய்வதற்காக ரயில் நிலையம் வரும் பயணிகள் அங்கேயே ஆதார், பான் கார்டு, வருமான வரி தொடர்பான சேவைகளைப் பெறுவது நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.