மத்திய அரசு நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தக வளர்ச்சிக்கான திட்டங்களை விரைந்து செயல்படுத்தி நிதி திரட்டும் திட்டத்தை வகுத்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. அதன்படி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் சொத்துகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டு அதன் மூலமாக நிதி திரட்டப்பட்டு வருகிறது. அந்த வகையில் ரயில்வேக்கு சொந்தமான 400 ரயில் நிலையங்கள், 90 பயணிகள் ரயில்கள், மலை ரயில் சேவை, ரயில்வே காலனிகள், விளையாட்டு மைதானங்களை பொது தனியார் பங்களிப்பு அல்லது செயல்படுத்துதல், பராமரித்தல், மாற்றுதல் போன்ற நடைமுறைகளுக்கு மாற்றி பணமாக்குவதற்கு மத்திய அரசு சார்பில் அடையாளம் காணப்பட்டு அதனை விரைந்து செயல்படுத்த ரயில்வேக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரயில்வே, ரயில் நிலையங்களை தனியார் மையம் ஆக்குவதை மட்டும் கைவிட முடிவு செய்துள்ளது. இது குறித்து ரயில்வே அதிகாரிகள் பி.டி.ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளனர். அதில் கூறியதாவது, “பொது தனியார் நடைமுறைக்கு மாற்றி நிதி திரட்டும் ரயில்வே அமைச்சக பட்டியலில் ரயில் நிலையங்களும் இடம்பெற்று இருந்தது. இந்நிலையில் ரயில்வே அமைச்சகம் தற்போது ஏ.பி.சி திட்டத்தின் கீழ் கொண்டு வருவதற்கு முடிவு செய்துள்ளது” என தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த சொத்துக்களை பணமயமாக்கல் திட்டத்தின் கீழ் நிகழ் நிதியாண்டில் 30 ஆயிரம் கோடி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை 1,829 கோடி மட்டுமே ரயில்வே அமைச்சகம் திரட்டி உள்ளது. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் மத்திய அரசின் சொத்துக்கள் மூலமாக நிதி திரட்டும் திட்டத்தின் கீழ் 4 வருடங்களில் 6 லட்சம் கோடி நிதி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இந்தத் திட்டத்தின் கீழ் 2022 -2023 ஆம் நிதியாண்டில் இதுவரை 33,422 கோடி திரட்டப்பட்டுள்ளது. இதில் நிலக்கரித்துறை அமைச்சகம் 17 ஆயிரம் கோடியை திரட்டி முன்னிலை வகித்து வருகிறது.