Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“ரயில்வேயில் வேலை வாங்கி தருகிறேன்” 7 லட்சம் ரூபாயை இழந்த வாலிபர்…. முன்னாள் ராணுவ வீரர் அதிரடி கைது…!!!

முன்னாள் ராணுவ  வீரர் 7 லட்சம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள கழிஞ்சூர் பகுதியில் அஜித்குமார்(23) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது உறவினரான ஹரிஹரன் என்பவர் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் ராணுவ பயிற்சி மையம் நடத்தி வரும் வசந்தகுமார்(51) என்பவருக்கு அறிமுகமானார். இந்நிலையில் தான் ராணுவத்தில் வி.ஆர்.எஸ் கொடுத்துவிட்டு ராணுவ பயிற்சி மையம் நடத்தி வருவதாக வசந்தகுமார் அஜித் குமாரிடம் தெரிவித்துள்ளார். மேலும் தனக்கிருக்கும் அரசியல் செல்வாக்கும் மூலம் இந்திய ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாகவும், அதற்கு 7 லட்சம் ரூபாய் செலவாகும் எனவும் வசந்தகுமார் கூறியுள்ளார்.

இதனை நம்பிய அஜித்குமார் கடந்த 2019-ஆம் ஆண்டு 7 லட்சம் ரூபாய் பணத்தை வசந்தகுமாரிடம் கொடுத்துள்ளார். ஆனால் கூறியபடி வேலை வாங்கி தராததால் பணத்தை திரும்ப தருமாறு அஜித்குமார் கேட்டதற்கு கடந்த ஜனவரி மாதம் 27-ஆம் தேதியிட்ட 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வசந்தகுமார் கொடுத்துள்ளார். மேலும் காசோலையை உடனே வங்கியில் செலுத்த வேண்டாம் எனவும், விரைவில் பணத்தை தருகிறேன் எனவும் வசந்தகுமார் கூறியுள்ளார். ஆனால் இதுவரை அவர் பணத்தை தராததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அஜித்குமார் கடந்த மே மாதம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனை அடுத்து வசந்தகுமார் 3 லட்ச ரூபாய்க்கான காசோலையை அஜித்குமாரிடம் கொடுத்துள்ளார். அந்த காசோலையை வங்கியில் செலுத்திய போது பணம் இல்லை என வந்ததால் கடந்த 9-ம் தேதி அன்று அஜித் குமார் வசந்தகுமாரின் வீட்டிற்கு சென்று பணம் கேட்டுள்ளார். அதற்கு பணத்தை தர முடியாது எனக்கூறி வசந்தகுமார் தகாத வார்த்தைகளால் அஜித் குமாரை திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இது குறித்து அஜித்குமார் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் வசந்தகுமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |