உத்திரபிரதேச மாநிலத்தில் டிக்கெட் பரிசோதகர் ரயிலில் இருந்து ராணுவ வீரரை தள்ளிவிட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பாலியா மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் சோனுசிங் குமார் (29). இவருக்கு டெல்லியில் பணி நியமனம் செய்யப்பட்டிருந்தது. இதனால் பணியில் சேர்வதற்காக பேரலி ரயில் நிலையத்திலிருந்து ராஜ்தானி விரைவு ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளார். ஆனால் அவர் வருவதற்கு தாமதம் ஆனதால் ரயில் புறப்பட்டுள்ளது. இதனால் சோனுசிங் குமார் ஒடிக்கொண்டிருந்த ரயிலில் அவசரமாக தனது முன்பதிவு பெட்டியில் ஏற முயற்சி செய்துள்ளார். அந்த பெட்டியில் இருந்த பயண டிக்கெட் பரிசோதகர் சுபம் போரே அந்த ராணுவ வீரரை ஏற விடாமல் தடுத்து வாக்குவாதம் செய்ய தொடங்கியுள்ளார்.
இதனையடுத்து பரிசோதகர் அவரை கீழே தள்ளிவிட்டு ரயில் பெட்டியின் கதவை திடீரென அடைத்துள்ளார். இதனால் நிலை தடுமாறி சோனுசிங் குமார் ரயில் பெட்டிகளுக்கு இடையே விழுந்ததால் அவரது ஒரு கால் துண்டானது. மேலும் மற்றொரு கால் நசுங்கி பலத்த காயமடைந்துள்ளது. இதனை பார்த்துக் நடைமேடையில் நின்று கொண்டிருந்த பொதுமக்களும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களும் இதனை பார்த்துக் கூச்சலிட்டதால் என்ஜின் ஓட்டுனர் உடனடியாக ரயிலை நிறுத்தியுள்ளார்.
அதன் பின் பலத்த காயங்களுடன் கிடந்த சோனு சிங் குமாரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு படுகாயமடைந்த அவரது இரண்டு கால்களும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே பேரலி ரயில் நிலையத்தில் சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் அங்கிருந்த ரயில்வே ஊழியர்களை அடித்து உதைத்துள்ளனர். உடனடியாக அங்கு வந்த போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.