சேலம் மாவட்டத்தில் உள்ள சீலநாயக்கன்பட்டி பகுதியில் ராஜசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திகை செல்வி(35) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 5- ஆம் வகுப்பு படிக்கும் பாலசத்யா(10) என்ற மகள் உள்ளார். கடந்த 11-ஆம் தேதி நள்ளிரவு நேரத்தில் முகத்தில் ரத்த காயங்களுடன் செல்வி சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் நடத்திய விசாரணையில் ராஜசேகரன் தனது மனைவியை கட்டையால் அடித்து கொலை செய்தது தெரியவந்தது.
இதனால் தலைமறைவாக இருந்த ராஜாசேகரனை நேற்று முன்தினம் தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரித்தனர். அந்த விசாரணையில் ராஜா சேகரன் கூறியதாவது, நான் தனியார் ஷோரூமில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறேன். செல்வி வீட்டில் இருந்தபடியே டைலரிங் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பளப் பணத்தை வீட்டிற்கு சரியாக கொடுக்காததால் செல்வி அடிக்கடி என்னுடன் தகராறு செய்தார்.
இதனை அடுத்து மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானதால் சம்பாதிக்கும் பணத்தை இப்படி குடித்தே அழித்தால் எப்படி குடும்பம் நடத்துவது? என செல்வி தகராறு செய்தார். மேலும் என்னை தகாத வார்த்தைகளில் திட்டியதால் கோபத்தில் ரீப்பர் கட்டையால் செல்வியின் தலையில் ஓங்கி அடித்தேன். இதனால் ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்த செல்வி சம்பவ இடத்திலே இறந்துவிட்டார். பின்னர் அச்சத்தில் அங்கிருந்து தப்பி ஓடி விட்டேன் என ராஜசேகரன் வாக்குமூலம் அளித்துள்ளார்.