ரசிகர்கள் தன்னுடைய பெயரைச் சொல்லி கூப்பிடுவதில்லை, அன்பாக தல என்றே அழைக்கின்றனர் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2020ம் ஆண்டுக்கான தொடர் வரும் 29ம் தேதி முதல் துவங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் முதல் போட்டி சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. போட்டிகளில் பங்கேற்பதற்காக வீரர்கள் தீவிர வலைப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
மும்பையில் முதல் போட்டி நடைபெற இருந்தாலும் ஒருசில நாட்கள் சென்னையில் பயிற்சியில் ஈடுபட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் சென்னை பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். சூப்பர் சிங் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி சர்வேத கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி பல மாதங்கள் ஆகிவிட்டன என்றாலும் அவரை அவரது ரசிகர்கள் கொண்டாடாத நாளே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு தோனியைப் பற்றிய தகவல்களை அவர்கள் ட்ரெண்ட் ஆக்கி வருகிறார்கள்.
சர்வதேச போட்டிகளில் தோனி விளையாடாத நிலையில், அடுத்ததாக அவர் விளையாடவுள்ள போட்டி ஐபிஎல் தொடர்தான். நீண்ட இடைவெளிக்குப் பிறகு விளையாட இருப்பதால் தோனியின் ரசிகர்கள் அவரது ஆட்டத்தைக் காண ஆவலுடன் இருக்கிறார்கள். சென்னை வந்துள்ள தோனி தற்போது வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார்.
இந்நிலையில் சிஎஸ்கே குறித்து பேசிய தோனி, இந்த பயணம் 2008-ல் தொடங்கியது. களத்திலும் களத்திற்கு வெளியிலும் ஒரு மனிதனாக, கிரிக்கெட் வீரராக எதிர்கொள்ளும் கடினமான சூழ்நிலையை கையாளும் கலையை கற்றுக்கொள்ள உதவியது ஐபிஎல் போட்டிகள்தான். தல என்றால் சகோதரன் என்று நான் எடுத்துக்கொள்கிறேன்.
அந்தப் பெயர்தான் எனக்கு ஏராளமான ரசிகர்களை சம்பாதித்து கொடுத்துள்ளது. எப்பொழுதெல்லாம் நான் சென்னை வருகிறேனோ அப்பொழுதெல்லாம் ரசிகர்கள் என்னை தல என்றே அழைக்கிறார்கள், யாரும் என்னுடைய பெயர் சொல்லி கூப்பிடுவதில்லை. தல என்று அழைக்கும் போது, அவர்கள் எனக்கு கொடுக்கும் மரியாதை, அன்பு தான் அவர்களிடமிருந்து வெளிப்படுகிறது என தெரிவித்துள்ளார்