வெடி மருந்து தயாரித்து காட்டுபன்றியை வேட்டையாடிய 2 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள சந்தமலைப்பகுதியில் வனச்சரகர் நாகராஜன், வனவர் விக்னேஷ் ஆகியோர் தலைமையில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் வனப்பகுதியில் 2 பேர் சந்தேகப்படும்படி சாக்கு மூட்டையை தூக்கிக் கொண்டு சென்று கொண்டிருந்தனர். இதனையடுத்து வனத்துறையினர் பார்த்ததும் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். இதனை பார்த்த வனத்துறையினர் உடனடியாக அவர்கள் 2 பேரையும் விரட்டி பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்த விசாரணையில் அவர்கள் ஆண்டிப்பட்டி பாலக்கோம்பையை சேர்ந்த சிவக்குமார், ஏத்தக்கோவில் பகுதியை சேர்ந்த வேல்சாமி என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் வைத்திருந்த சாக்குப்பையில் உயிரிழந்த காட்டு பன்றியின் உடல் மற்றும் வெடி மருந்து இருந்துள்ளது. இதுகுறித்து வனத்துறையினர் அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரித்ததில் யூடியூபை பார்த்து வெடிமருந்து தயாரித்து காட்டுப்பன்றி போன்ற வனவிலங்குகளை தொடர்ந்து வேட்டையாடியது தெரியவந்துள்ளது.