சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலையானது 100 டாலரை தாண்டி உயர்ந்துள்ள நிலையில், அதன் எதிரொலியாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அதிகரித்துள்ளது. இதன் காரணமாக விலைவாசி உயர்வு பிரச்னைகள் ஏற்பட்டுள்ள நிலையில் இதற்கு தீர்வுக்காண மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. இதனிடையில் இந்தியாவுக்கு தரமான உரால் ரக கச்சா எண்ணெயை போருக்கு முந்தைய விலையிலிருந்து 35 டாலர் குறைவாக வழங்க ரஷ்யா முன் வந்ததாக தகவல்கள் வெளியாகியது. இது தொடர்பாக ரஷ்ய அமைச்சர் செர்கை லாவ்ரோவின் டெல்லி வருகையின் போது பேசப்பட்டது.
இதையடுத்து கச்சா எண்ணெயை ரஷ்யாவிடம் இருந்து வாங்குவதை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதிசெய்துள்ளார். இருப்பினும் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதை அமெரிக்கா எதிர்த்து வருகிறது. இதன் காரணமாக ரஷ்யாவுக்கு தாங்கள் விதித்த பொருளாதார தடைகள் பலன் அளிக்காமல் போகும் என்று அமெரிக்கா கருதுகிறது. வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷவர்தனுடன் பேசிய அமெரிக்க தேசிய துணை பாதுகாப்பு ஆலேசாகர் தலீப் சிங், இந்தியாவில் சீனா அத்துமீறும் போது ரஷ்யா உதவிக்கு வராது என்று தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவை வர்த்தக ரீதியாக சார்ந்து இருப்பதை குறைத்துக் கொள்ளுமாறு சமீபத்தில் டெல்லி வந்திருந்த இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ்-உம் வலியுறுத்தி இருந்தார். இதை புறந்தள்ளிவிட்டு ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்க இருக்கிறது. எங்கள் நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு தான் முதன்மையானது எனவும் குறைந்த விலையில் கச்சா எண்ணெய் கிடைத்தால் அதில் என்ன தவறு எனவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.