நாளுக்கு நாள் மோசடி சம்பவங்களானது அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க சைபர் கிரைம் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் மக்கள் மோசடி வலைக்குள் சிக்கி ஏமார்ந்து விடுகின்றனர். அந்த வகையில் தற்போது காசோலைகளைத் திருடி ஊழியர் ஒருவர் மோசடி செய்த சம்பவம் கோவையில் அரங்கேறி உள்ளது.
கோவை-திருச்சி சாலையில் தனியார் கார் விற்பனை ஷோரூம் இருக்கிறது. இங்கு திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த வெங்கட சுப்பிரமணி (45) என்பவர் கணக்குப்பிரிவு ஊழியராக பணிபுரிந்து வந்தார். இதையடுத்து இவர் திடீரென்று வேலையிலிருந்து நின்று விட்டார். இந்நிலையில் அந்த நிறுவனத்தில் கணக்குகளை தணிக்கை செய்தபோது, வெங்கட சுப்பிரமணி, அந்த அலுவலகத்திலிருந்து காசோலைகளை திருடி நிறுவன கணக்கிலிருந்து ரூபாய்.42 லட்சத்தை எடுத்து கூட்டாளிகளின் கணக்குக்கு அனுப்பி மோசடி செய்தது தெரியவந்தது.
இது தொடர்பாக புகாரின்படி நகர குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, மோசடியில் ஈடுபட்ட வெங்கட சுப்பிரமணியத்தின் கூட்டாளிகள் கார்த்திக், சிவா, தினேஷ்பாபு போன்றோரை கைது செய்தனர். இதற்கிடையில் வெங்கட சுப்பிரமணி தலைமறைவாக இருந்தார். இந்நிலையில் அவரையும் நேற்று காவல்துறையினர் கைது செய்தனர். அத்துடன் மோசடி செய்த பணம் அவரிடமிருந்து முழுமையாக கைப்பற்றப்பட்டதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.