சென்னை கீழ்ப்பாக்கம் கருணை இல்லத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் சசிகலா கலந்து கொண்டார். கேக் வெட்டி அருட்சகோதரிகளுடன் பகிர்ந்து கொண்ட அவர் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சசிகலா கூறியதாவது, பெங்களூருவில் இருந்து வந்தது முதல் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என கூறி வருகிறேன். அனைவரையும் ஒன்றிணைக்கும் பணியில் இறங்கிவிட்டேன். மேலும் எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் தான் தனித்தனியாக செயல்படுகின்றார்கள். அனைவருக்கும் பொதுவான ஆளாகத்தான் நான் இருக்கிறேன். நான் இருக்கும் வரை அ.தி.மு.க தொண்டர்கள் சோர்வடைய மாட்டார்கள் என கூறியுள்ளார்.
அ.தி.மு.க வை ஒன்றிணைக்கும் பணியை ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும், தனக்கு பின் யாரை நியமித்தால் சரியாக இருக்கும் என்பது ஜெயலலிதாவிற்கு தெரியும் அதற்கான பணியில் அவர் ஈடுபட்டு வந்த நிலையில் தான் திடீரென இறந்துவிட்டார் எனவும் சசிகலா குறிப்பிட்டுள்ளார். மேலும் தீபா உட்பட யாரையும் நான் திட்டியதில்லை அறிவுரை தான் கூறுவேன். நேரடி அரசியலில் நான் இல்லாவிட்டாலும் 24 மணி நேரமும் மக்களுக்கான திட்டங்கள் பற்றி ஜெயலலிதாவுடன் ஆலோசித்து இருக்கிறேன் என கூறியுள்ளார். அ.தி.மு.க வை பா.ஜ.க விழுங்கும் என்பது தவறு. யாரும் யாரையும் விழுங்க முடியாது என கூறியுள்ளார்.
அதனை தொடர்ந்து பேசிய அவர், “நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் அனைவரையும் ஒருங்கிணைப்பேன். நாடாளுமன்ற தேர்தலில் நல்ல வெற்றியை பெறுவோம். யாருக்காகவும் நான் பயந்து ஒடி ஒளிய மாட்டேன் என கூறியுள்ளார். இதனையடுத்து ஆறுமுகம் சாமி ஆணையம் அறிக்கையை குறித்து மனம் திறந்து பேசிய அவர், ஆணையத்தின் அனைத்து கேள்விகளுக்கும் எழுத்து வடிவில் சரியான பதிலை கொடுத்தேன். 2016-ஆம் வருடம் டிசம்பர் 19-ஆம் தேதி ஜெயலலிதாவை டிஸ்சார்ஜ் செய்ய திட்டமிட்டு இருந்தோம். ஆனால் ஜெயலலிதா இறந்தது டிசம்பர் 5-ஆம் தேதி தான் அதில் எந்த மாற்றமும் இல்லை” என விளக்கம் அளித்துள்ளார்.