யாராலும் திருட முடியாத சொத்து கல்வி மட்டும் தான் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
அரசு பள்ளிகளில் செயல்பட்டு வரும் பள்ளி மேலாண்மை குழுக்களை மறுகட்டமைப்பு செய்வதற்கான தொடக்க விழாவினை முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வெலிங்டன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நம் பள்ளி நம் பெருமை என்ற திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு வாகனங்களை முதலமைச்சர் மு க ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார்.
மேலும் இந்த மேலாண்மை குழுவில் பெற்றோர், உள்ளாட்சி அமைப்பினர், பிரதிநிதிகள், பள்ளி ஆசிரியர்கள், கல்வியாளர்கள் உள்பட பலர் இடம்பெற இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பேசும்போது பள்ளிப்பருவம் திரும்பக் கிடைக்காத மகிழ்ச்சி. மனநிறைவு, மகிழ்ச்சி, கொண்டாட்டம் உடையது பள்ளிப் பருவம். ஒரு தலைமுறைகளில் பெறக்கூடிய கல்வி அறிவானது ஏழேழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும். அதனை உங்களிடம் இருந்து யாராலும் பிரிக்க முடியாது.
திருட முடியாத சொத்து என்று கூறினால் அது உங்களின் கல்வி மட்டும் தான் அதை நீங்கள் மறந்து விடக்கூடாது. எத்தனை மிக மிக வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளுங்கள் அந்த அளவு கல்விக்காக அரசு மிக மிக மிக முக்கியத்துவத்தை தொடர்ந்து கொடுத்து வருகின்றது. மேலும் கல்வி என்னும் நீரோடை சீராக செல்ல மாணவர்கள் பெற்றோர்கள், ஆசிரியர்கள் எண்ணம் ஒரே சீராக இருக்க வேண்டும்.