தமிழகத்தில் பிரசித்தி பெற்ற திருக்கோவில்கள் ஒன்றான நெல்லையில் அமைந்துள்ள சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோவிலில் காந்திமதி என்னும் யானை இருக்கிறது. 52 வயதாகும் யானை காந்திமதிக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வசதிகள் செய்யப்பட்டிருக்கிறது. மேலும் வருடம்தோறும் நடைபெறும் யானைகள் புத்துணர்வு முகாமிற்கு அனுப்பப்பட்டு யானையின் உடல் எடை மற்றும் யானை உடல் நன்மைக்காக மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. தினமும் யானை காந்திமதி கோவில் வளாகத்தை சுற்றி சுமார் 5 கிலோமீட்டர் வரை நடைபயணம் மேற்கொண்டு வருகிறது.
இதன் காரணமாக யானை உடல் எடை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறது. வயது முதிர்வு காரணமாக சாலைகளில் யானை சென்று கொண்டிருக்கும்போது மிகவும் கவனத்துடன் அழைத்து செல்லும் நிலை இருந்து வருகின்றது. இந்த சூழலில் இந்து வியாபாரிகள் சங்கம் மற்றும் பக்தர்கள் சார்பில் நெல்லையப்பர் கோவிலில் யானை காந்திமதிக்கு புதிய செருப்பு நன்கொடையாக வழங்கப்பட்டிருக்கிறது. ரூபாய் 12000 மதிப்பில் பிரத்யோகமான யானை காந்திமதிக்காக தயாரிக்கப்பட்ட இந்த செருப்பை கோவில் அதிகாரிகளிடம் பக்தர்கள் சார்பில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து மருத்துவர்கள் ஆலோசனையின் படி யானைக்கு செருப்பு அணிவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் நாளை முதல் நெல்லையப்பர் கோவில் ஆணி திருவிழா தொடங்க இருக்கின்ற நிலையில் சுவாமி ரத வீதியில் உலா வரும்போது யானை காந்திமதி முன் செல்வது வழக்கமாகும். அப்போது மிடுக்கான அலங்காரத்துடன் காலில் வெள்ளி சலங்கை கட்டி யானை காந்திமதி ரத வீதிகளில் உலா வரும். இந்த நிலையில் இந்த வருடம் புதிய வரவான செருப்பு அணிந்து புதிய தோற்றத்தில் யானை வலம் வர இருப்பதை காண்பதற்கு பக்தர்கள் மிகுந்த ஆர்வத்தில் இருக்கின்றனர். மேலும் குழந்தைகள் சாலையில் நடந்து செல்ல கற்கள் குத்தாமல் இருப்பதற்காக பெற்றோர்கள் செருப்பு வாங்கி கொடுத்து பாதுகாப்பாக நடக்க வைப்பதை போன்று யானையும் குழந்தையாக பாவித்து கோவில் நிர்வாகம் நெல்லையப்பர் கோவில் பக்தர்கள் காந்திமதியை பாசமாக பராமரித்து வருவது அனைவரிடத்தும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.