முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தின் வழக்குகள் கைவிடப்படுவதாக அறிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூரில் மக்களிடையே உரையாற்றிய போது அவர் பேசியதாவது, கொரோனோ தீவிரத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி பல விதிமுறைகளை அறிவித்திருந்தது. இதனைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் காவல்துறையினரால் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு ஊரடங்கு நடைமுறைப்படுத்துவதற்கான செயல்முறைகளும் மேற்கொள்ளப்பட்டன.
மேலும் ஊரடங்கு விதிமுறைகளை மீறியவர்கள் மற்றும் கொரோனா குறித்து தவறான தகவல்கள் பரப்பியவர்கள் போன்றவற்றின் அடிப்படையில் சுமார் 10 லட்சம் வழக்குகள் காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்டு சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் தவறான வழிகளில் இ-பாஸ் பெற்று பயன்படுத்தியது, காவல்துறையினர் பணி செய்ய விடாமல் இடையூறு செய்தது போன்ற வழக்குகள் இதில் அடங்கும்.
இதேபோன்று மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை நிறைவேற்றியது தொடர்பாக மாநிலத்தில் நடந்த போராட்டங்கள் குறித்து பதிவு செய்யப்பட்டிருந்த வழக்குகள் அனைத்தும் கைவிடப்பட்டுள்ளது. அதாவது இந்த போராட்டங்களில் தடைகளை மீறி பொதுமக்களுக்கு இடையூறு செய்தது, பொது சொத்துக்களை சேதப்படுத்தியது காவல்துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்தது போன்றவற்றின் அடிப்படையில் சுமார் 1,500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.