குஜராத் மோர்பி பாலம் விபத்தில் 141பேர் நீரில் மூழ்கி உயிரிழந்து விட்டனர். இதற்கிடையில் 100க்கும் அதிகமானோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இந்நிலையில் அந்த பாலத்தை சீரமைக்கும் பணியினை மேற்கொண்ட காண்டிராக்டர் அதை சரிவர செய்யாமல் ஏமாற்றிய விபரம் தற்போது அம்பலத்துக்கு வந்திருக்கிறது. அது 143 வருடங்கள் பழமைவாய்ந்த பாலம் என்பதால் அதை சீரமைக்க முடிவுசெய்யபட்டு அதற்குரிய பணியை மேற்கொள்ள சென்ற 6 மாதத்திற்கு முன் ஓரேவா என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இப்பணியை முடிக்க வருகிற டிசம்பர் மாதம்வரை அவகாசம் கேட்டிருந்தார்.
ஆனால் தீபாவளி மற்றும் குஜராத் புத்தாண்டை முன்னிட்டு அதற்கு முன்பாக பணியை முடிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக அவசர அவசரமாக இப்பணி நடந்து கடந்த 26-ஆம் தேதி மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. தனியார் நிறுவன காண்டிராக்டர் அந்த பாலத்தை தாங்கிபிடிக்கும் கேபிள்களை மாற்றாமல் வர்ணம் மட்டும் பூசி புதுப்பிக்கப்பட்டது போன்று மாற்றினார். இது தான் 141 பேர் உயிரிழந்ததற்கு காரணமாக அமைந்துவிட்டது. இதனால் அந்நிறுவனம் முழுமையாக பாலத்தை சீரமைத்ததா..? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. இது குறித்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
எனவே விசாரணைக்கு பிறகு தான் விபத்துக்கான முழுவிவரம் தெரியவரும். இந்நிலையில் பிரதமர் மோடி நேற்று சம்பவம் நடைபெற்ற பாலத்தை நேரில் பார்வையிட்டார். அத்துடன் விபத்து குறித்து அவர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அதன்பின் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை பார்த்து ஆறுதல் கூறினார். அதனை தொடர்ந்து பிரதமர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் இவ்விபத்து குறித்த வழக்குப்பதிவில் சம்மந்தப்பட்ட நிறுவனத்தினுடைய பெயரும், நகராட்சி நிர்வாகிகளின் பெயரும் எதற்காக இடம் பெறவில்லை? என காங்கிரஸ் மூத்ததலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.