இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஓரிக்கை வேளிங்கப்பட்டறை தெருவில் முருகன்(59) என்பவர் வசித்து வருகிறார். இவர் சுங்குவார்சத்திரம் காவல்நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலைப்பார்த்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் வழக்கம் போல் பணிக்காக இருசக்கர வாகனத்தில் சுங்குவார்சத்திரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர் சின்னயன்சத்திரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு லாரி திடீரென இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட முருகன் லாரி சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக பெரிய காஞ்சிபுரம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் முருகனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர் பெருமாள் (41) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.