மாணவரை வெட்டி கொலை செய்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்திலுள்ள துவரங்குறிச்சியில் ராமலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிருஷ்ணன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ராமலிங்கம் செட்டியபட்டி கிராமத்தில் வசிக்கும் வெள்ளையம்மாள் என்பவரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே ஏற்கனவே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது ராமலிங்கத்தின் மோட்டார் சைக்கிளை வெள்ளையம்மாள் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ராமலிங்கத்தின் மகனான கிருஷ்ணன் தனது தந்தையின் மோட்டார் சைக்கிளை கேட்பதற்காக வெள்ளையம்மாளின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் வெள்ளையம்மாளுடன் இருந்த பச்சைமுத்து என்பவர் மாணவனை அரிவாளால் வெட்டியுள்ளார். இதனால் படுகாயமடைந்த மாணவனை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மாணவன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பச்சமுத்துவை கைது செய்தனர். ஆனால் வெள்ளையம்மாள் கைது செய்யவில்லை. இதனால் கோபமடைந்த பள்ளி மாணவர்கள் அந்த பெண்ணையும் கைது செய்ய வலியுறுத்தி கஞ்சநாயக்கன்பட்டியில் இருக்கும் செந்துறை சாலையில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பள்ளி மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கிடையில் எஸ்.புதூரில் பதுங்கியிருந்த வெள்ளையம்மாளை காவல்துறையினர் கைது செய்தனர். சுமார் 4 மணிநேர போராட்டத்திற்கு பிறகு மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.