ஸ்ரீபெரும்புத்தூர் ஆலையில் இருந்து உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிற்கு அனுப்புவதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தமிழகத்திலிருந்து வேறு மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் திருப்பி விடப்பட்ட விவகாரத்தின் தொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், கொரோனா தொற்று பாதிப்பை தடுக்க கடும் முயற்சிகள் எடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டால், தமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி அளவான 400 மெட்ரிக் டன் என்ற அளவை கூடுதலாக 450 மெட்ரிக் டன் தேவைப்படுவதாக எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு இதே காலத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 58,000 இருந்ததாகவும், நடப்பு ஆண்டில் இதே காலகட்டத்தில் நோயாளிகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டி விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு 220 மெட்ரிக் டன் ஆக்சிஜன் போதும் என மத்திய அரசு தவறான கணக்கீடு செய்திருப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஸ்ரீபெரும்புத்தூர் ஆலையில் இருந்து உற்பத்தி செய்யப்படும் 80 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜனை ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிற்கு அனுப்ப உத்தரவிட்டதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போதைய கொரோனா சூழலை கருத்தில் கொண்டால் தமிழகத்தில் ஆக்சிஜன் நுகர்வு 310 மெட்ரிக் டன்னை தாண்டிவிட்டதாக எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். தென்னிந்தியாவில் சென்னை நகரமே அதிக கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை கொண்டுள்ளதாகவும், எனவே ஆக்சிஜனை வேறு மாநிலத்திற்கு வேறு மாநிலத்திற்கு நியாயமல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.