பெங்களூருவை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு லஞ்சம் கொடுத்ததாக கூறி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக கைது செய்யப் பட்டார். இவர் மீது பல்வேறு விதமான மோசடி குற்றங்களும் சுமத்தப்பட்டதால் சுகேஷ் திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார். இவர் சிறையில் இருக்கும் போது மற்றொரு மோசடி வழக்கிலும் சிக்கினார். அதாவது ஒரு தொழிலதிபருக்கு ஜாமீன் வாங்கி தருவதாக கூறி அவருடைய மனைவியிடம் 200 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார்.
இந்த மோசடி வழக்கில் சுகேஷின் மனைவி லீனா மரியபால் மற்றும் அவருடைய உதவியாளர் பிங்கி இராணி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் சுகேஷ் தான் ஏமாற்றி சம்பாதித்த பணத்தின் மூலம் தன்னுடைய உதவியாளர் உதவியுடன் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் உட்பட பல்வேறு நடிகைகளுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக நடிகைகளுக்கு பணத்தை அள்ளி கொடுத்துள்ளார். இந்த குற்றங்கள் தொடர்பாக அமலாக்க பிரிவும், டெல்லி போலீஸ்சாரும் சுகேஷிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் நடிகை ஜாக்குலினிடம் நேற்று 8 மணி நேரமாக அமலாக்க துறையினர் விசாரணை நடத்தினர். அதேபோன்று பிங்கி இராணியிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள் 2 பேரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், பல்வேறு வேற்றுமைகள் இருப்பதால் அமலாக்க துறையினர் ஜாக்குலினை டெல்லியை விட்டு வெளியேறக்கூடாது என்று கூறியுள்ளனர். இதற்கிடையில் மற்றொரு நடிகை நேரா பதேகியிடமும் நேற்று விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையின் போது நேரா, சுகேஷின் குற்ற செயல்கள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனக் கூறியுள்ளார்.
இந்த வழக்கில் அமலாக்க துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். அந்த குற்ற பத்திரிகையின் படி வழக்கில் ஜாக்குலின் மற்றும் நேரா பதேகி தவிர நடிகைகள் அருஷா பாட்டில், சோபியா சிங், சாகத் கின்னா, நிகிதா தம்போலி ஆகியோரும் வழக்கில் இடம்பெற்றுள்ளனர். இந்த 4 நடிகைகளிடமும் பிங்கி சுகேஷ் குறித்து பல்வேறு விதமாக கூறியுள்ளார். அதாவது நிகிதா தம்போலியிடம் சுகேஷ் தென்னிந்திய சினிமா தயாரிப்பாளர் என்றும், அவருடைய பெயர் சேகர் என்றும் கூறியுள்ளார். இதேபோன்று சோபியா சிங்கிடம் சினிமா தயாரிப்பாளர் சேகர் ரெட்டி என்றும், அருஷாவிடம் வேறொரு பெயரையும் கூறியுள்ளார்.
இதனையடுத்து சாகத் கண்ணாவை பிங்கி தொடர்பு கொண்ட போது அவர் சுகேஷ் குறித்து கூகுளில் தேடியதில் அவர் செய்த மோசடி வழக்குகள் தெரிய வந்துள்ளது. இது பற்றி சாகத் கண்ணா பிங்கியிடம் கேட்டபோது, அது அவர் இல்லை எனவும், அது சுகேஷ் சந்திரசேகர் எனவும், இது சுரேஷ் சந்திரசேகர ரெட்டி எனவும் கூறியுள்ளார். அதோடு அவர் ஒரு பிரபலமான தமிழ் தொலைக்காட்சியின் உரிமையாளர் என்றும், முன்னாள் முதலமைச்சர் ஒருவரின் உறவினர் என்றும் நடிகையிடம் பிங்கி கூறியுள்ளார்.
இந்த நடிகைகளை திகார் ஜெயிலுக்கு பிங்கி அழைத்துச் சென்று சுகேஷை அறிமுகப் படுத்தியுள்ளார். அந்த சந்திப்பின் போது 4 நடிகைகளுக்கும் சுகேஷ் எல்வி பைகள், குஸ்ஸி பேக்குகள், வெர்சேஸ் வாட்ச் போன்ற விலை உயர்ந்த பரிசுகளை வழங்கியுள்ளார். இதன் மூலம் பிங்கி இராணியும் ஆதாயம் பெற்றுள்ளார். கடந்த 2018-ஆம் ஆண்டு பிங்கிக்கு சுகேஷ் 10 லட்சம் ரூபாய் கொடுத்தபோது அதிலிருந்து 1.5 லட்ச ரூபாயை நிகிதா தம்போலிக்கு கொடுத்திருக்கிறார் என குற்றப்பத்திரிக்கையில் இருக்கிறது. இதன் காரணமாக 4 நடிகைகளிடமும் விசாரணை நடத்துவதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.