மொபட் மீது டிராக்டர் மோதியதில் 3 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சாணார்பாளையம் பகுதியில் பார்த்திபன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேலூர் வி.ஐ.டி கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று பார்த்திபன் தனது தாய் பரிமளாதேவி மற்றும் அக்கா மகள் பிருத்விகாவுடன் மொபட்டில் சென்றுள்ளார். அப்போது திருச்செங்கோடு வாலரை கேட் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது அப்பகுதி வழியாக வந்த டிராக்டர் எதிர்பாராத விதமாக மொபட் மீது மோதியுள்ளது.
இந்த விபத்தில் சிறுமி பிருத்விகா படுகாயமடைந்த நிலையில் பார்த்திபன் மற்றும் பரிமளாதேவிக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்த அப்பகுதி வழியாக சென்றவர்கள் காயமடைந்த 3 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து அங்கு முதலுதவி செய்த மருத்துவர்கள் பிருத்விகாவை ஈரோடு அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே துரதிஷ்டவசமாக சிறுமி பிருத்விகா உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற திருச்செங்கோடு காவல்துறையினர் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் மொபட் மீது மோதிய டிராக்டர் டிரைவர் சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.