பாப் உலகத்தின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் மைக்கேல் ஜாக்சன் தனது நடன திறமையால் பல ரசிகர்களை தன் வசப்படுத்தியவர். பெயர், புகழ், பணம் என அனைத்திலும் சிறந்து விளங்கிய இவர் பல பிரச்சினைகளில் சிக்கி வந்தார். அதில் குறிப்பாக சிறுவர்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக 1993ல் இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. ஆனால் 1994 ஆம் ஆண்டு நீதிமன்றத்திற்கு வெளியில் இந்த வழக்கு முடிவுக்கு வந்தது. அதன் பிறகு மீண்டும் 2005ல் அதே குற்றச்சாட்டு மைக்கேல் ஜாக்சன் மீது எழுந்தது. ஆனால் இந்த வழக்கில் அவர் நிரபராதி என தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த வழக்குகளால் மைக்கேல் ஜாக்சனின் வளர்ச்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மைக்கேல் ஜாக்சன் இறந்த பிறகு 2019ல் லீவிங் நெவர்லன்ட் என்ற ஆவணப்படம் ஒன்று வெளியானது. இயக்குனர் டென் ரீட் எடுத்த இந்தப் படம் இரண்டு இளைஞர்களை மையப்படுத்தி இருந்தது. அவர்கள் இருவரும் தாங்கள் மைக்கேல் ஜாக்சனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டவர்கள் என அவர் மீது குற்றம் சாட்டினர். அவருடைய ரசிகர்கள் இதற்காக அவர்கள் மீது வழக்கு தொடர்ந்தனர்.
எனினும் இந்த ஆவணப்படம் மைக்கேல் ஜாக்சன் இறந்த பின் அவர் மீது எதிர்மறையான பிம்பத்தைக் கட்டமைத்தது. அதனால் சில அருங்காட்சியகங்கள் மற்றும் பேஷன் நிறுவனங்கள் அவருடைய நினைவாக தாங்கள் காட்சிப்படுத்தி இருந்த பொருட்களை நீக்க முடிவு செய்தன. உலகப் புகழ்பெற்ற ராக் அண்ட் ரோல் ஹால் ஆஃப் ஃபேம் அவர் எப்போதும் ஒரு இசைக்கலைஞராக நினைவில் இருப்பார் எனவும் அவருடைய நினைவுகள் மக்களின் பார்வைக்கு வைக்கப்படும் எனவும் கூறியுள்ளது.