சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் கடந்த 16ஆம் தேதி முழு கொள்ளளவை எட்டியது. அன்று காலை முதல் அணையின் உபரி நீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. முதலில் வினாடிக்கு 25,000 கன அடி திறந்துவிடப்பட்ட தண்ணீர் அணைக்கு வரும் நீர்வரத்தை பொறுத்து படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. அதிகபட்சமாக வினாடிக்கு 1,10,000 கன அடி வரை தண்ணீர் 16 கண் மதகுகள் வழியாக திறந்து விடப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வந்தது. இதனால் 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பது படிப்படியாக குறைக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று முன்தின அன்னைக்கு நீர்வரத்து வினாடிக்கு 23 ஆயிரம் கன அடியாக குறைந்தது. அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் அணையையொட்டி அமைந்துள்ள நீர்மின் நிலையங்கள் வழியாக வெளியேற்றப்பட்டு வந்ததால் அணையின் உபரி நீர் 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பது நேற்று முன் தினம் இரவு நிறுத்தப்பட்டது. இதற்கிடையில் நேற்று மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 20000 கன அடியாக குறைந்தது. மேலும் அணையிலிருந்து வினாடிக்கு 19500 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. அணையின் நீர்மட்டம் 120 அடியாக இருந்தது.