உலக “மன இறுக்கம் பெருமை” தினத்தை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் யங் இந்தியன்ஸ் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து சிறப்பு பள்ளிகளை சேர்ந்த மாற்றுத்திறன் குழந்தைகள் மெட்ரோ ரயிலில் பயணிக்க ஏற்பாடு செய்து இருந்தது. அந்த வகையில் 5 சிறப்பு பள்ளிகளை சேர்ந்த 215 மாற்றுத்திறன் குழந்தைகள் மற்றும் 15 தன்னார்வலர்கள் சென்னை செனாய் நகரிலிருந்து விமான நிலையம் நோக்கி பயணம் மேற்கொள்ள தயாராக இருந்தனர்.
இதை அறிந்த மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் எம்.ஏ.சித்திக், அந்த குழந்தைகளை மகிழ்விக்கும் விதமாக அவர்களுடன் சேர்ந்து பயணம் மேற்கொண்டார். இது தொடர்பாக அவர் கூறியதாவது “மாற்றுத்திறன் கொண்டவர்கள் மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொள்ளும்போது அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தயாராக இருக்கிறது” என்று கூறினார். இந்த பயணத்தின்போது மெட்ரோ ரயில் நிறுவன இயக்குனர் (திட்டங்கள்) டி.அர்ச்சுனன், கூடுதல் பொது மேலாளர் (ரெயில் பராமரிப்பு மற்றும் இயக்கம்) எஸ்.சதீஸ்பாபு உட்பட பலர் இருந்தனர்.