‘பாவக்கதைகள்’ ஆந்தாலஜி படத்தில் சுதா கொங்கரா இயக்கியுள்ள ‘தங்கம்’ கதையை பற்றி கூறியுள்ளார் .
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களான கௌதம் மேனன், விக்னேஷ் சிவன், வெற்றிமாறன், சுதா கொங்கரா ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள ஆந்தாலஜி படம் ‘பாவக் கதைகள்’ . இந்த படம் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 18 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படம் ஆவணக்கொலைகளை மையப்படுத்தி உருவாகியுள்ளது . சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதில் கௌதம் மேனன் இயக்கியுள்ள கதைக்கு ‘வான்மகள்’ என்ற டைட்டிலும் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள கதைக்கு ‘லவ் பண்ணா உட்ரணும்’ என்ற டைட்டிலும் வெற்றிமாறன் இயக்கியுள்ள கதைக்கு ‘ஓர் இரவு’ என்ற டைட்டிலும் சுதா கொங்கரா இயக்கியுள்ள கதைக்கு ‘தங்கம்’ என்ற டைட்டிலும் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ள தங்கம் படம் குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் , ‘நடிகர் சாந்தனுவின் காதலுக்காக உயிர்த்தியாகம் செய்யும் மூன்றாம் பாலினத்தவராக நடிகர் காளிதாஸ் நடித்துள்ளார் . மூன்றாம் பாலினத்தவரின் வலியை சொல்லும் கதை இது . இந்தப் படம் இயக்கும் வரை அவர்களின் வாழ்க்கையைப் பற்றி யோசித்ததில்லை . ஆனால் இந்த படத்துக்காக அவர்கள் ஆசைகள் , உணர்வுகளை அறிந்து கொள்ள ஆய்வுகளை மேற்கொண்டேன் . அவர்களில் பலரை நேரில் சந்தித்தேன் . அதனடிப்படையில் இந்த படத்தை உருவாக்கியிருக்கிறேன் . இந்தப் படத்தைப் பார்த்தாவது அவர்களை இனி மரியாதையாக நடத்துவார்கள்’ என்று கூறியுள்ளார் .